deepak
deepak

Friday, October 10, 2014

கேதார கௌரி விரத கதை பாட்டு வடிவில்..

கேதார கௌரி விரத கதை பாட்டு வடிவில்..

காப்பு ஆதி பரமேஸ்வரியே ஆண்டவனைப் பூசித்துப் பாதியிடம் பெற்ற பரிசு தனை- நீதியுடன் சொன்னவர்கள் கேட்டவர்கள் சோர்வின்றி நோற்றவர்கள் துன்னுவரே பல்வளனும் தோய்ந்து

நூல் வெள்ளியங்கிரியென விளங்கு கைலையில் உள்ளந்தோறும் உறையும் ஒருவன் உமையொரு பாகனாய் உன்னதரேத்த இமையா முக்கண் திகழ் இறையவனாய் புன்னகை பொங்கும் திருமுகம் பொலிய வன்மையுடனே விளங்கிடும் பொழுதில் விண்ணக அழகியரில் வியன் புகழுடையாள் கண்கள் வியக்கும் கவினுடை ரம்பை பண்ணுடை இசைக்குப் பரதம் பயின்றாள்

பிருங்கி என்னும் பெருந்தவ முனிவனும் கருத்தை மயக்கும் இந்நாட்டியம் கண்டு விருப்பம் மிகுந்த விகடநடனத்தால் கருணைக் கௌரிகாந்தனைப் போற்ற அண்ணலும் பிருங்கியை அனுக்கிரகிக்க பண்ணும் சிவநெறிப் பிருங்கிப் பித்தர் மண் சுமந்திட்ட கடவுளை மட்டும் சுற்றி வந்தே சம்போ மகாதேவவென்று பற்றுதலுடனே பன் முறை போற்றி வற்றாக்கருணை உமையை வணங்கா உற்ற திடமுடன் நிலவுலகு மீள முற்றும் துறந்த பிருங்கியாம் முனிவன் சற்றும் தன்னை மதியாமை கண்டு சக்தி தரும் சங்கரி மிகக்கோபித்து தக்க தண்டனை தருவோம் யாமென துக்கமுண்டாக அவன் சரீரத்திலங்கு சக்தியெல்லாம் நீங்கவே சபித்தாள்

நண்டொடு பன்றிக்கும் நல்லருள் சுரக்கும் அண்ணலோ பிருங்கியின் அவலம் கண்டு தண்டமொன்றை அவன் தாங்க அளித்து பெண்ணுடை செயற்கு எதிர் செயலாக திண்மை கொடுத்திட தீரனாம் முனிவனும் அட்டகாசனாய் விகடமாய் ஆடி நட்டம் பயில் நாதனைப் போற்றிட எட்டுத்திசையும் ஏத்தும் அம்மை வெட்கம் மிகுந்து வேதனை கொண்டு கைலையை விட்டு காசினிபுகுந்து கானகம் தோறும் சுழன்று திரிந்து அலையும் மனதை அடக்கியகௌதமன் நிலையிலா இன்பம் நாடா முனிவனகத்து கலை நிறை பூங்காவின் மரமொன்றிலே இலை மறை காயாய் இனிதுறைந்திட்டாள்

மாரி குன்றி மலரெல்லாம் வாடி சீரியல் சிதறி செந்நெறி மறைந்து பாரிலே பாலைவனம் எனக்கிடந்த பேரியல் அவ்வனம் பெரிதும் மலர்ந்து கூர்விழி கொண்ட கௌரி மீனாளுற்ற பேருவகையாலே பொலிவுறச் சிறந்து அந்தணர் மகிழ ஆவினம் சிறக்க சுந்தர மலர்கள் சுகந்தம் பரப்ப சந்ததம் குளிர்ந்த சந்தோஷம் தெரிந்து தந்தை போலும் கௌதம மறையோன் முந்தைப் பிணக்கால் மாதிரிபுரசுந்தரி வந்த தன்மை உணர்ந்தே வணங்கிப் பந்தமுறவே பாங்குறப் போற்றினன்

அர்த்த நாரியாய் அரனார் உடலில் பர்த்தா பத்தினி பேதம் ஒளிய இருவர் என்னும் இயல்பு இல்லாமல் ஒருவர் என்னும் உயர்வே ஓங்க கிருபை பொலியும் காட்சியே தோன்றும் அருளைப் பெறும் வகை அருள்கநீரே என்று அம்மை வேண்ட அம்மாமுனிவனும் தன் புண்ணியப்பயன் போலுமிதுவென கன்னல் மொழியன் கௌதமன் மகிழ்ந்து பன்முறை போற்றி கேதாரகௌரியென்ற வன்மை நிறை விரத முறைமையை அம்மைக்குச் சொல்ல அவளும் மகிழ்ந்து எம்பிரானை நோக்கி நோன்பு முயன்றாள்

புரட்டாதித் திங்கள் புகழ் அமாவாசை இரவு கழிந்த ஈரைந்தாம் நாளாம் வரம் மிகத்தரு விஜயதசமி தொட்டு இருபத்தொரு நாள் இறைவனை நோக்கி கருணை மிக்க காமவல்லி நோற்று வரும் சதுர்த்தசியில் வாழ்வு சிறக்க இருபத்தொரு முடிச்சுஇட்ட காப்பிழை கரத்தில் அணிந்தாள் காரிகையாளே

மான்மழு ஏந்திய மாநாற் கரத்தராய் வான் மண் ஏத்திட வெள்விடையேறி தேன்நிறை கூந்தல் தேவி முன்பு கோன் என மணவாளக்கடவுள் தோன்றி நோன்பினை ஏற்றோம் நொந்தனையோ என்றே வினவி எம்மன்னை கௌரியை தன்னோடு அணைத்தே தந்தோம் இடம் என்று இனிய மொழிபேசி நடமிடு நாயகர் உருவம் மாறினன்

அப்பனும் அம்மையும் ஆங்கே இணைந்து இப்புவி ஏத்த அர்த்தநாரீசனாய்
இலங்கு செப்பருவடிவம் கொண்டனர்; அதனை தப்பிலாப் பிருங்கியொடு கௌதமர் விண்ணகத்தர் மண்ணவர் யாவரும் கண்களி கூரமகிழ்ந்தே போற்றினர்

எம்மை நோக்கி இவ்விரதத்தை முறையாய் இம்மையில் நோற்பவர் இன்பமெல்லாம் பெறுவர் நம்புமின் இதைஎன்றே நாயகஅர்த்தநாரீசர் மொழிந்தே அருளினர் போற்றினர் யாவரும்

அன்று தொட்டே ஆடவர் மங்கையர் என்னும் யாவரும் ஏற்றம் பொங்க மண்ணுலகத்தில் மணவாழ்வு உண்டாக பண்ணும் செயல்கள் பலிதமுண்டாக செல்வம் ஓங்க சீர்மைகள் பொலிய பல்வகை இன்பமுடன் பரகதிகிட்ட கேதாரகௌரியுடன் கடவுளைப் போற்றி தீதில் நோன்பு நோற்றுச் சிறந்தார்

எழுதியவர்- நீர்வை.தி.மயூரகிரிசர்மா

No comments:

Post a Comment